புதிய குரோதி வருஷ விசேட பூஜை!- 2024

எதிர்வரும் 13-04-2024 அன்று சனிக்கிழமை முன்னிரவு 08.15 மணிக்கு பூர்வபக்க ஷஷ்டி திதியில், மிருகசீரிட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், துலாம் லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய குரோதி வருஷம் பிறக்கின்றது.

அன்று பிற்பகல் 04.15 மணி முதல் பின்னிரவு 12.15 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்

இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து, நீலம், வெள்ளை நிற பட்டாடையாயினும், வெள்ளைக் கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும்.

புதிய குரோதி வருடப் பிறப்பு நாளின் மறுநாளாகிய (14-04-2024) ஞாயிற்றுக்கிழமை மேற்கூறிய வண்ணம் ஸ்நானம் செய்து புதிய வஸ்திரமணிந்த பின்னர், மனத்தூய்மையுடன் குலதெய்வங்களை வழிபாடு செய்து, பிதா, மாதா, குரு ஆகியோரை வணங்கி, இயன்ற தான தருமங்கள் செய்து மங்களகரமாக வாழக்கடவர்.

புதிய குரோதி வருஷ தோஷ நட்சத்திரங்கள்:-

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள், சித்திரை, விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களைச் செய்தல் வேண்டும்.

அன்றைய தினம் அருள்மிகு முருகையா ஆலயத்தில்,  முற்பகல் 10.00 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று, ஆலய வாசலில் புதிய பானையில் பொங்கல் செய்து படைத்து, சித்திரைப் புதிய குரோதி வருஷ விசேட பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த சித்திரை புதிய குரோதி வருடப் பிறப்பு விசேட பூஜையில் முருகையாவின் அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – மா.அருமைலிங்கம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்