தேர் திருப்பணி வேலைகள் ஆரம்பம் பற்றிய அறிவித்தல்

எதிர்வரும் 25-04-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதாவது புதுவருடத்துடன் தேர் திருப்பணி வேலைகளை ஆரம்பிப்பதற்கு அருள்மிகு முருகையாவின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

இன்றைய தினம் தேர்த் திருப்பணி வேலைகளான சித்திரத்தேர் மற்றும் தேர்முட்டி அமைத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஆலய வளாகத்தில் கொட்டகை அமைத்து அதில் வைத்தே தேர் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் கொட்டகையை நிர்வாகத்தினர் தமது செலவில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சித்திரத்தேர் அமைக்கும் பணியை கோயில்குளம், மன்னார் ஞானவைரவர் சிற்பக் கலையக உரிமையாளரான சி.சாரங்கன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை தேர்முட்டி அமைக்கும் பணியை யாழ். அராலியூர் சுி.சுகந்தன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்

27 அடி உயரமுடைய சித்திரத்தேர் அமைப்பதற்குரிய செலவீனம் 70 லட்சம் ரூபா என ஆசாரியாரினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை ஆசாரியார் 3லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான சிம்மாசனம் (தேருக்கு சுவாமி கொண்டு செல்லும் வாகனம்) ஒன்றை அன்பளிப்பாக செய்து வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

எனினும் தேருக்குரிய  ஐம்பொன்னினாலான கலசம் குடையுடன், பாகமாலை, தேர் இழுக்கும் வடக்கயிறு, மணிவகைகள் என்பன  ஆலய நிர்வாக சபையினர் வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்தச் செலவுகள் 70 லட்சம் ரூபா மதிப்பீட்டிற்குள் அடங்காதவை.

தேர் அமைக்கும் திருப்பணி ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்து தரப்பட வேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் தேர் அமைப்பதற்குரிய பணக் கொடுப்பனவு இந்த ஒரு வருடத்திற்குள் ஆறு கட்டங்களாக வழங்கப்படல் வேண்டும் என ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதேவேளை தேர் முட்டி அமைப்பதற்கு முழுச் செலவீனமாக 40 லட்சம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பணக் கொடுப்பனவு கட்டம் கட்டமாக வழங்கப்படல் வேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ளது.

முருகையாவின் மெய்யடியார்களே!
தேர் திருப்பணி வேலைகளை செய்து முடிப்பதற்கு மொத்தச் செலவீனமாக சுமார் ஒரு கோடியே 25 லட்சம் ரூபா தேவைப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதுவரை தேர் திருப்பணிக்கென சுமார் 65 லட்சம் ரூபா வரை சேர்ந்துள்ளது. இன்னமும் 60 லட்சம் ரூபா சேகரிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்துடன் இரண்டு வேலைகளும் சமகாலத்தில் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

எனவே  அருள்மிகு முருகையாவின் மெய்யடியார்களே!
தாங்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதிநன்கொடைகளை மனமுவந்து வழங்கும் பட்சத்தில் எம்பெருமானின் தேர் திருப்பணி வேலைகளை உரிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியும் என்பதை தெரிவிப்பதுடன், மீண்டும் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்.