புதிய சித்திரத்தேர் திருப்பணி அறிவித்தல்!

அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு 27 அடி உயரமுடைய எண்கோண புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

மேற்படி சித்திரத்தேர் அமைப்பதற்கான தீர்மானம் கடந்த 28-08-2020ம் திகதி நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாக வழங்கப்பட்டது.

27 அடி உயரமுடைய சித்திரத்தேரை அமைப்பதற்கு மன்னாரைச் சேர்ந்த ஞானவைரவர் சிற்பக கலையக ஆசாரியார் சாரங்கன் அவர்கள் 70 லட்சம் ரூபா செலவில் அடுத்த வருட மகோற்சவத்திற்கு முன் செய்து தருவதற்கு இணங்கியுள்ளார். அத்துடன் 3லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான சிம்மாசனத்தையும் அன்பளிப்பாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஐப்பசி மாதம் வருகின்ற முதல் முகூர்த்த நாளில் தேர் அமைப்பதற்கான ஆரம்ப பணிகளை நடாத்த எம்பெருமான் வழிகாட்டலுடன் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சித்திரத்தேர் பணிகள் நடைபெறவுள்ள அதேவேளை தேர் முட்டி அமைக்கும் பணிகளும் சமகாலத்தில் நடைபெற வேண்டும் என்பதையும் அருள்மிகு முருகையாவின் அடியார் பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேர் செய்வதற்கு பணம் வழங்க வேண்டிய விபரம் வருமாறு:-

01. தேர் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது முற்பணமாக முதற்கட்டமாக 10 லட்சம் வழங்கப்படல் வேண்டும்.

02.முதல் வேலை ஆரம்பித்து ஒன்றரை மாதங்களில் அச்சு பார் கோர்ப்பு நிகழ்வின் போது இரண்டாம் கட்டமாக 15 லட்சம் வழங்கப்படல் வேண்டும்.

03.அடுத்து 3 மாதங்களில் விக்கிரக வரி மட்ட வேலை இடம்பெறும் போது மூன்றாம் கட்டமாக 15 லட்சம் வழங்கப்படல் வேண்டும்.

04. அடுத்து 2 மாதங்களில் வியாழ வரி வேலை நடைபெறும் போது நான்காம் கட்டமாக 10 லட்சம் வழங்கப்படல் வேண்டும்.

05. தொடர்ந்து ஒரு மாத காலத்தில் பந்தல் வேலை நடைபெறும் போது ஐந்தாம் கட்டமாக 10 லட்சம் வழங்கப்படல் வேண்டும்.

06.அடுத்து முழுமையாக வேலை முடிந்து தேர் வெள்ளோட்டம் விடும் போது மீதி 10 லட்சம் வழங்கப்படல் வேண்டும்.

எம்பெருமான் அடியார்களே!
அருள்மிகு முருகையாவுக்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கு தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை உரிய காலத்தில் வாரி வழங்கி அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகோற்சவத்தில் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்