இராஜகோபுரம் அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் இராஜகோபுரப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதனை மெய்யடியார்களுக்கு மனமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நேற்றைய தினம் (30-03-2018) ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் இராஜகோபுரப் பண்டிகை அமைக்கும் பணியை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயத்தில் நடைபெற்று வந்த சுற்றுக்கொட்டகை அமைக்கும் வேலைகளில் கட்டுமானப் பணிகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கூரைப்பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் கூரை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் நாம் முற்கூறிய பிரகாரம் சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணி பூர்த்தியடைந்துள்ள நிலையில், இராஜகோபுரத் திருப்பணியை  ஆரம்பிப்பது சம்பந்தமாக சில புலம்பெயர் அடியார்கள் வழங்கிய ஆலோசனைக்கமைவாக நேற்றைய தினம் நிர்வாக சபை கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, இராஜகோபுரப் பண்டிகை மற்றும் பொம்மைகள் அமைக்கும் பணிகள் யாவும் இந்திய சிற்பாசாரிமார் குழுவினரைக் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  இராஜகோபுரப் பணிகள் தொடர்பாக விக்னேஸ்வரன், அப்பன் ஆகிய இரண்டு ஆசாரிமார்களிடம்  மதிப்பீடு சம்பந்தமாக கேள்விப்பத்திரம் கோரப்பட்டது.

அவர்கள் இருவரும் வழங்கிய மதிப்பீட்டு அறிக்கைகள் இரண்டும் ஆராயப்பட்டு இறுதியில், தற்போது எமது ஆலயப் பணிகளை மேற்கொண்டு வரும் அப்பன் ஆசாரியார் வழங்கிய அறிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் ஒப்பந்த அடிப்படையில் அப்பன் ஆசாரியாரிடமே இராஜகோபுரத் திருப்பணி ஒப்படைக்கப்படவுள்ளது.

அவர் தனது பொறுப்பில் இராஜகோபுரப் பணிகளை, தற்போது மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயப் பணிகளை மேற்கொண்டு வரும் சோமாஸ்கந்தா என்ற தென்னிந்திய சிற்பாசாரியார் தலைமையில் மேற்கொள்வதாக எமக்கு உறுதியளித்துள்ளார்  என்பதையும் அறியத்தருகின்றோம்.

”கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”

மேற்படி புண்ணிய கைங்கரியப் பணியை மேற்கொள்ள சுமார் ஒன்றரைக்கோடி ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக வேலையை ஆரம்பிக்க சுமார் ஐம்பது லட்சம் ரூபா தேவையென ஆசாரிமார் அறிவித்துள்ளனர்.

எனவே, எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மனமுவந்து தங்களாலியன்ற பெருந்தொகை நிதிப் பங்களிப்பினை நல்கி மேற்படி இராஜகோபுரப் பணியை கூடிய விரைவில் நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு இருகரம் கூப்பி பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.

குறிப்பு:-
வடமராட்சி கிழக்கில் முதன்முறையாக எமது ஆலயத்தில் தான் இராஜகோபுரம் அமையவுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நிர்வாக சபையினர்