நிர்வாக சபைக் கூட்டத் தீர்மானங்கள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நேற்று (22-01-2018) திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

01.ஆலயத்தில் நடைபெறும் விஷேட அபிஷேகம் மற்றும் உற்சவ காலங்களில் குருக்கள் ஒழுங்கீனம் காரணமாக ஆலய பூசகருடன் கலந்தாலோசனை நடாத்தி காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் பூசகரின் மாமனாரும் கடந்த காலங்களில் எங்கள் ஆலயத்தில் பணியாற்றியவருமான இ.சிவநேசக் குருக்களிடம்  ஆலய நிர்வாக சபையினரும் பூசகரும் சென்று நேரடியாகச் சந்தித்துப் பேசிய போது இனிவரும் வெள்ளி அபிஷேகம் மற்றும் உற்சவ காலங்களுக்கு தாம் வந்து சிறப்பாக நடாத்தி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை நேற்றைய கூட்டத்தில் முதலாவது தீர்மானமாக நிறைவேற்றி வைக்கப்பட்டது.

02. 2019ம் ஆண்டு மாசி மாதமளவில் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக அதாவது 2018 நவம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக பொதுச்சபை அங்கத்தவர் பட்டியல் பூர்த்தி செய்யப்படவுள்ளது.. ஆகவே முருகையாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அடியவர்கள் அனைவரும் ஆயுட்கால சந்தாப் பணமாக ரூபா ஆயிரம் (1000/=) மட்டும் செலுத்தி தங்களது அங்கத்துவத்தை உறுதி செய்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அத்துடன் அங்கத்தவர்கள் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அறிவித்தல் வெளியிடப்படல் வேண்டும் என்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதற்கிணங்க உடனடியாக பனர் ஒன்றும் ஆலயத்தில் வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

வெளிநாட்டில் உள்ள அடியவர்களுக்கு விரைவில் அங்கத்தவர் விண்ணப்ப படிவம் கிடைக்க நிர்வாக சபை ஒழுங்குகளை மேற்கொள்ளும்.

03. வெளிநாட்டில் உள்ள சில அடியார்கள் முருகையா ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக நிர்வாக சபையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது அது விடயம் சம்பந்தமாக நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு, அலங்கார உற்சவம் நடாத்துவதற்கு அடியார்கள் முன்வந்தால் அதற்கு நிர்வாக சபை பூரண ஆதரவு வழங்கும் என்றும், உற்சவம் நடத்தும் காலம் மற்றும் திருவிழா உபயங்கள் வழங்குதல் ஆகியவற்றை கவனத்திற்கொண்டு, அது தொடர்பில் தகுந்த ஆலோசனை பெற வேண்டியிருப்பதால், இந்த வருடம் (2018) பூர்வீக நாகதம்பிரான் ஆலய உற்சவ காலத்தில் வெளிநாட்டு அடியார்கள் அதிகமாக வருகை தருவதால் அந்த காலத்தில் ஒரு விசேட பொதுக்கூட்டத்தை கூட்டி மேற்குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வது சாலப் பொருத்தமானதாகும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்படுவது சிறந்தது என முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் அன்றைய விசேட கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு பொதுச்சபை அங்கத்தவர்களின் ஆலோசனை பெறப்பட்டு இறுதி முடிவு எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

04. அண்மையில் இடம்பெற்ற தைப்பொங்கல் விசேட பூஜை மற்றும் ஐயனார் அபிஷேகம் சிறப்பு பூஜை ஆகிய இரண்டு உபயங்களும் ஒரே நேரத்தில் இடம்பெற்றதாக செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அது தொடர்பாக அடுத்து வரும் காலங்களில் ஐயனார் பூஜையை இந்தியாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நடைபெறும் நேரத்திலேயே அதாவது தைப்பொங்கல் தினத்தன்று மாலை நேரத்திலேயே இடம்பெற்று சபரிமலையில் தீபமேற்றும் நேரமான முன்னிரவு 6.30 மணியளவிலே் தீபமேற்றி விழா நிறைவுபெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, உபயகாரரான மு.கதிர்காமு குடும்பத்தினரை அழைத்து இது தொடர்பாக தெளிவுபடுத்தப்படல் வேண்டும் என தீர்மானித்ததன் பேரில் குறித்த உபயகாரர் வீட்டில் இல்லாத காரணத்தினால் அந்தப் பொறுப்பை திரு. தவராசா தான் ஏற்று அவர்களுக்கு கூறுவதாக உறுதியளித்தார்.

05. தைப்பொங்கல் பூஜை மற்றும் சித்திரை வருடப்பிறப்பு விசேட பூஜை ஆகியவற்றை அடுத்துவரும் காலங்களில் அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு பூஜையாக மேற்கொள்ள வேண்டுமென உபயகாரர்களுக்கு அறிவுறுத்தப்படல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

06. கடந்த வருடம் ஆவணி மாதம் தொடக்கம் ஆலய கரும பீட பணியாளராக கடமையாற்றும் வேல்நாயகம் அவர்களுக்கு வேதனமாக ரூபா பதினைந்தாயிரம் வழங்கப்பட்டது. அவருடன் ஆரம்பத்தில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி இந்த 2018 ஜனவரி மாதம் தொடக்கம் அவரது வேதனம் இருபதாயிரம் ரூபாவாக வழங்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

07.தற்போது ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக்கொட்டகை திருப்பணி வேலையை விரைவில் அதாவது எதிர்வரும் சித்திரை மாதத்துக்குள் பூர்த்தி செய்து தரவேண்டுமென ஆசாரி முகுந்தனை நேரில் அழைத்து அறிவுறுத்தப்பட்ட போது அவர் விரைவாக முடித்து தரப்படும் என தெரிவித்துள்ளார். இது விடயம் சபையினரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

08. ஆலயத்தில் நடைபெறும் வெள்ளிக்கிழமை அபிசேகம் மற்றும் விசேட உ ற்சவம் ஆகியவற்றை பொறுப்பேற்றுள்ள உபயகாரர்கள் தங்கள் உபயத்திற்குரிய பணத்தை முன்கூட்டியே நிர்வாக சபையினருக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி தங்கள் உபயத்தை உறுதி செய்துகொள்ள வேண்டுமென உபயகாரர்கள் தெரிந்துகொள்ளக் கூடியதாக  ஆலய இணையத்தளத்தில் செயதி வெளியிட வேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டது.

நிர்வாக சபையினர்